search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை இலை"

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - திமுக கட்சிகள் 8 தொகுதிகளில் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரட்டை இலை - உதயசூரியன் 11 இடங்களில் மோதுகின்றன. #Election2019 #ADMK #DMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-வும், திமுக-வும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. அந்த தொகுதிகள் விபரம் வருமாறு:-

    1. சேலம் 2. பொள்ளாச்சி 3. திருவண்ணாமலை 4. நீலகிரி (தனி) 5. திருநெல்வேலி 6. மயிலாடுதுறை 7.காஞ்சிபுரம் (தனி) 8. தென்சென்னை

    அதிமுக.வும், திமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னமும், உதயசூரியன் சின்னமும் நேரடியாக 11 இடங்களில் களத்தில் மோதுகின்றன.

    பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 2 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இந்த 2 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது. அதிமுக இந்த 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறது. இங்கு திமுக போட்டியிடுகிறது.

    இரட்டை இலை 21 தொகுதிகளிலும், உதயசூரியன் 23 தொகுதிகளிலும் (விழுப்புரம்) போட்டியிடுகிறது.

    பாமக-வுக்கும், திமுக-வுக்கும் இடையே 6 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் வருமாறு:-

    மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர்.

    விழுப்புரம் (தனி) தொகுதியில் பா.ம.க. - விடுதலை சிறுத்தைகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும், தூத்துக்குடியில் திமுகவுடனும், ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக்குடனும், கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடனும் மோதுகிறது.

    தேமுதிக வடசென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் திமுகவுடனும் திருச்சி, விருதுநகர் ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும் மோதுகிறது.

    தஞ்சாவூர் தொகுதியில் தமாகா-வுக்கும், திமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    தென்காசி தொகுதியில் திமுகவும், புதிய தமிழகமும் நேரடியாக மோதுகிறது.

    அதிமுக மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுடனும், நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டுடனும் மோதுகிறது.

    காங்கிரஸ் - அதிமுக இடையே 5 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதன்விபரம்:-

    திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி,

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் (தனி), தொகுதியில் நிற்கிறார். அவரை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது.

    ஈரோட்டில் அதிமுக-வுக்கும் மதிமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
    அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார். #ADMK #Parivendhar
    சென்னை:

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி இருக்கிறேன்.

    ஆனால் இன்னும் பா.ஜனதா தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

    1 மாதத்துக்கு முன்பாக பியூஸ்கோயல் என்னை டெல்லிக்கு அனைத்து பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேசினார். அப்போது நமது கூட்டணி தொடர்கிறது என்று அவருக்கு சொன்னேன். என்னிடம் எந்த தொகுதி என்றும் கேட்டார். அதை அவருக்கு குறித்தும் கொடுத்திருக்கிறேன். அதன்பிறகு எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

    திருச்சியில் நான் கமல்ஹாசனுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் தங்கியிருந்த ஓட்டலில் அவர் தங்கினார். அப்போது என்னை பார்த்தார். நம் இருவருக்கும் ஒரே கொள்கையாக இருக்கிறது என்பதால் நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று கேட்டார். செயல்படலாமே என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து மீண்டும் பேசலாம் என்று சொன்னார். பேசினோம். அது அந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை நான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நான் இன்னும் பா.ஜனதா தோழமையில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க.விடம் பேசி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னால் எனக்கு தயக்கம் இல்லை. அந்த முடிவு பா.ஜனதா மூலமாக வரவேண்டும்.



    3-வது அணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பா.ஜனதா எனக்கு சரியான முடிவு சொல்லாவிட்டால் 3-வது அணியில் நான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Parivendhar
    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் கருணாஸ் உள்பட மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை நீக்குவது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

    இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டி.டி.வி.திகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்துள்ளனர்.

    தமிழக சட்டசபையில் ஏற்கனவே கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன. நேற்று 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு விட்டதால் மொத்தம் 20 தொகுதிகள் காலி இடங்களாக உள்ளன.

    இந்த 20 தொகுதிகளுக்கும் அரசியலமைப்பு சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த 20 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

    குறிப்பாக 20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் கருணாஸ் ஆகியோரே அந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவராக உள்ளார். எனவே அவர் மீது கட்சி விதி மீறல்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டி.டி.வி.தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.

    அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அ.தி.மு.க. தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதுபோல “இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாசும் வெளிப்படையாக டி.டி.வி. தினகரனை ஆதரித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி.டி.வி. தினகரன், கவர்னரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த வேண்டும் என்று மனு கொடுக்க சென்றபோது, நடிகர் கருணாசும் உடன் சென்றிருந்தார்.


    கடந்த மாதம் அவர் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். மேலும் அ.தி.மு.க. அரசை விமர்சித்து பேசி வருகிறார். இவையெல்லாம் கட்சி விதி மீறல்களாக உள்ளன.

    அ.தி.மு.க. கட்சி விதிகளை நடிகர் கருணாஸ் மீறியதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே இரட்டை இலை தயவால் வெற்றி பெற்ற கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகரால் மிக, மிக எளிதாக பறிக்க முடியும்.

    கருணாஸ், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 4 பேர் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2 வாரங்களுக்கு முன்பு சூசகமாக தெரிவித்தார். எனவே டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் இந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    4 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு..க. கட்சி விதிகளை முழுமையாக மீறியுள்ளனர். அரசை தொடர்ந்து அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    எனவே “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த அ.தி.மு.க. மூத்த தலைவர் கூறினார்.

    இந்த நிலையில் கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி மூவரும் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்கள் கூறி வருகிறார்கள். கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. துரோகிகளை நீக்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.

    பிரபு எம்.எல்.ஏ. கூறுகையில், “என் மீது நடவடிக்கை எடுத்தால் சட்ட ரீதியாக சந்திக்க தயார்” என்று கூறியுள்ளார். டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 4 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து விமர்சித்து வருவதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க.வில் வலுத்து வருகிறது.

    இதற்கிடையே நடிகர் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்தால் அது அ.தி.மு.க. அரசுக்கு சாதகமான அம்சமாக மாறும் என்று தெரிய வந்துள்ளது. சட்டசபையில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம்.

    தற்போது சட்டசபையில் 214 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அ.தி.மு.க.வுக்கு 110 எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த விதத்திலும் ஆபத்து இல்லை.

    என்றாலும் சட்டசபையில் கூடுதல் பலமுடன் இருக்க வேண்டும் என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதன்படி கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 210 ஆக குறையும்.

    அந்த நிலையில் அ.தி.மு.க., தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட 106 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே போதும். எடப்பாடி பழனிசாமியை 110 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பதால் சற்று அதிக பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியை நடத்த முடியும். எனவே நடிகர் கருணாஸ் உள்பட 4 பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

    அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், திருவாடானை, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்படும். அந்த 4 தொகுதிகளுக்கு தனியாக இடைத்தேர்தல் நடத்தப்படும். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
    அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்கப் போவதாக கூறும் தினகரனால் அது முடியவே முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #TNMinister #Jayakumar #Dhinakaran
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் எம்.ஜி. ஆரால் இதே நாளில் ஆரம்பித்த இயக்கமாகும். புரட்சித்தலைவி மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் சிதறி விடும். சுக்கு நூறாகி விடும் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

    அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் இந்த இயக்கத்தை எழுச்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் 3 ஆண்டில் பொன்விழா வருகிறது. அதையும் நாங்கள் தான் கொண்டாடுவோம். 100 ஆண்டு வரும்போது அந்த விழாவையும் நாங்கள்தான் கொண்டாடுவோம்.

    அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்கப் போவதாக தினகரன் கூறுகிறார். அவரால் அது முடியவே முடியாது. கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க நினைக்கிறார். அதுவும் முடியாது.


    முதலில் அவர் ஆர்.கே.நகரில் ராஜினாமா செய்து விட்டு திரும்ப நின்று ஜெயிக்கட்டும். அதுவும் அவரால் முடியாது.

    எனவே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம். அந்த மாதிரி கதையா இருக்கிறது. அவரிடம் ஏதோ ஒரு 5 சதவீதம் அளவுக்கு ஆட்கள் உள்ளனர். அவர்களுக்காக ஏதேதோ சொல்கிறார். எனவே ஒன்றும் நடக்க போவதில்லை.

    கடல்வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல்வற்றி செத்து போன கதைதான் தினகரனின் கதை.

    மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்கிறார். ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். சர்க்காரியா கமி‌ஷனை மறந்து விட்டு அவர் பேசக்கூடாது.

    எனவே மக்கள்தான் இறுதி எஜமானார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் நாங்கள்தான் ஜெயிப்போம்.

    இலங்கை அரசு 6 மீனவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த புதிய சட்டத்தை ஏற்க இயலாது. மத்திய அரசு இதில் தலையிட்டு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #Dhinakaran
    ஒரு போராளியாக தன் வாழ்க்கையை அமைத்த, அம்மா அவர்களின் வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் சட்டப்பூர்வமாக மீட்டெடுப்போம் என்று டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #TTVDhinkaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. 1972 அக்டோபர் 17 அன்று சுயநல சித்தாந்தத்தை எதிர்த்து சீறி சிலிர்த்தெழுந்த இயக்கம். பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியாரின் பாசறையில் தோன்றிய, அண்ணாவின் கொள்கை காக்க, புரட்சித்தலைவரின் ஆற்றல் மிக்க தலைமையில் அவதரித்த மக்கள் இயக்கம், அடுத்தடுத்த வெற்றிகள் படிக்கட்டுகளாய் அமைந்த போதிலும், அ.தி.மு.க. ஒரு நாள் நாடாளுமென்று, அன்று ஆட்சியிலிருந்த தி.மு.க. ஏற்றுக்கொள்ளவே இல்லை.

    மாயை என்றார்கள், நடிகர் என்றார்கள், அடக்கு முறை ஆயிரம் ஏவினார்கள், புழுதிவாரி தூற்றினார்கள், ஆனாலும் மறந்தே போனார்கள், அன்று அமைந்த தி.மு.க. ஆட்சி புரட்சித்தலைவரின் உழைப்பால் மலர்ந்தது என்று, எனினும், மக்கள் சக்தி மகத்தானது என்பதனை ஒவ்வொரு தேர்தல் களத்திலும் புரட்சித்தலைவரின் தலைமை நிரூபித்துக் காட்டியது.


    புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பின்னால் அ.தி.மு.க.வும் மறைந்துபோகும் என்று ஆருடம் கணித்தவர்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில், இயக்கத்தை ஒன்றாக்கி, இழந்த சின்னத்தை மீட்டு, இழந்த புரட்சித் தலைவரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் நம் அம்மா.

    இந்திய நாட்டிற்கே ஆட்சி முறையில் வழி காட்டிய மாநிலமாக தமிழகத்தை திகழச்செய்து, எல்லாத்தரப்பினருக்கும் ஆட்சியின் பலன் சென்று சேரவைத்து தாய்மார்கள், பெரியோர்கள், விவசாயிகள், பாட்டாளிகள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்குமான அரசாக திகழ்ந்தது அம்மாவின் அரசு.

    துரோகத்தின் பிடியிலும், ஆதிக்கத்தின் வசமும், அ.தி.மு.க சிறைபட்டு கிடக்கும் கொடுமையை கண்டுதான் அம்மாவின் 90 சதவீதத்திற்கு மேலான உண்மையான தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு உள்ளனர். எஞ்சியிருப்பவர்கள் தங்கள் சுயநலனுக்காக இருக்கும் ஒரு சிலரே.

    இந்த நொடி வரை உண்மையான அ.தி.மு.க.வாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே திகழ்ந்து வருகிறது. இனி வரக்கூடிய காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.கவை மீட்டெடுக்கும் காலமாகவே அமைந்திடும்.

    ஒரு போராளியாக தன் வாழ்க்கையை அமைத்த, அம்மா அவர்களின் வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் இக்கொடியவர்களின் பிடியிலிருந்து சட்டப்பூர்வமாக மீட்போம். அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் ஒவ்வொருவரும் கழகம் மீட்கும் ஜனநாயக போராளிகளாக களத்தில் நின்றிடுவோம். துரோகத்தை வீழ்த்திடுவோம், இதில் வென்றிடுவோம்.

    இவ்வாறு தினகரன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinkaran #Sasikala #EdappadiPalaniswmai
    ×